Friday 27 April 2012

இந்தியா ஒளிர்கிறது (ஜனநாயகத்தின் இருட்டுக்குள்)

     இந்தியா ஒளிர்கிறது எனும் தலைப்பில் நான் இன்று  தொடங்கியிருக்கும் இந்த ஒளிப்பயணம், ,, இனி ஓயாமல் தொடரும்,,, ஜனநாயகத்தின் இருளை அகற்ற நான் கையில் இன்று ஏந்தியிருப்பது ஒற்றைத்தீக்குச்சி மட்டுமே! எல்லோரும் ஒன்றிணைந்து நின்றால் மட்டுமே இந்த ஒற்றைத்தீக்குச்சி  ஒளிப்பிழம்பாகும் நீங்கள் பற்றிக்கொள்ளும்வரை ஒற்றை ஆளாய் ஒயாமல் எரிய நான் தயார்,,

       படித்தவர்களுக்கு வேலை இல்லை,உழைப்பவர்களுக்கு உரிய ஊதியமில்லை மக்களுக்கு நல்ல சுகாதாரமான வாழ்வு இல்லை, ஊழல் இல்லாத துறைகளும் இல்லை தண்ணீருக்குமட்டுமல்ல நல்ல அரசியல்வாதிகளுக்கும் பஞ்சம் இப்பொழுது,, ஆனாலும் இந்தியா ஒளிர்கிறது,, அரசியல்வாதிகளின் அறிக்கைகளில் மட்டும் ,,,,
  
        உணவுப் பொருட்களில் ஊழல், போபர்ஸ் பீரங்கியில் ஊழல், சவப்பெட்டியில் ஊழல், மாட்டுத்தீவனத்தில் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், என ஊழலில் செழித்த தேசமாகத் திகழும் இந்திய நாட்டின் இணையற்ற வளமான மனிதவளத்தின் ஒரு புள்ளியாய் உங்கள் முன்னே சில கருத்துக்களைப் பதிவு செய்ய விழைகின்றேன்.

      ஊழலுக்கெல்லாம்  காரணம் என்ன? பொருளாதாரத்தை தேடிகுவிக்க வேண்டும் எனும் பேராசை, எனவே இந்திய சட்டத்தில் எவருடைய சொத்து விவரங்களையும் எவர்வேண்டுமானாலும் பார்வையிடலாம் என்ற வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவந்து அவற்றை இணையதளத்தில் வெளியிட வேண்டும் இதன்மூலம் முறைகேடான வழிகளில் சொத்துக்கள் சேர்ப்பதும் வரிஏய்ப்பு செய்வதும் முற்றிலுமாக தவிர்க்கப்பட வாய்ப்புகள் உருவாகும் கண்காணிப்புகள் பிறக்கும்பொழுது  கட்டுப்பாடுகள் தானே வந்துவிடும் இல்லையேல் கட்டைவண்டியில் போகிறவன், கட்டையில் போகிறவரை அப்படியே வாழ்ந்துவிட்டும் கொள்ளையடிப்பவன் கடைசிவரை கோபுரத்தின் உச்சியிலுமே வாழ்ந்துவிட்டு போகும் நிலைதான் நீடிக்கும்,

       எந்த ஒரு அரசியல்வாதியும் மக்களின் வரிப்பணத்திலிருந்து எந்த ஒன்றையும் இலவசமாக வழங்ககூடாது என சட்டம் வேண்டும் இலவசம் வழங்குவது என்றால் அவர்களின் சொந்தபணத்திலிருந்து வழங்குவதற்கு வரிவிலக்கு அளித்தால்கூட தவறில்லை இந்திய பொருளாதாரத்தை இடுகுழியில் தள்ளுவதைபோல் இலவசங்களை வழங்கிட வரிப்பணத்தையெல்லாம் வள்ளல்போல் வாரி இறைப்பது என்பது Slow Poision சாப்பிடுவதுபோல் ஆகும் இது நம்மை மெதுவாகவும் வருங்கால, தலைமுறையை மிக வேகமாகவும் பாதிக்ககூடியது ஆகும். 

    இலவசமாய் வீட்டுக்கு ஒரு வேலை என சட்டம் கொண்டுவந்து அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட வழிசெய்யும்பொழுது மனிதவளத்தின் வளர்ச்சியானது செழுமைகொள்ளும் ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவு அடையும்பொழுது சமூகமும் சமூகத்தின்மூலம் நம் தேசமும் புதுப்பொழிவினை அடையும்என்பது திண்ணம் இல்லையேல் கலாமின் கனவு தேசம் கடைசிவரை கனவாகவே போய்விடும்!!!

    கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டத்தின்படி 6 முதல் 14 வரை உள்ள குழந்தைகள் கல்வி கற்றே ஆகவேண்டும் என்பது எவ்வாறு சட்டமாக்கப்பட்டுள்ளதோ அதைப்போலவே கட்டாய இலவச மருத்துவ பரிசோதனை சட்டம் என்ற ஒன்று நாடுமுழுவதும் அமல் செய்யப்படவேண்டும் அதன்மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் குழந்தைகள் முதல் பெரியவர்வரை அனைவரின் உடல்நிலைகளும் முற்றிலும் இலவசமாக பரிசோதிக்கப்பட்டு தக்க சிகிச்சைகள் வழங்கி நோயற்ற தேசமாக நம் தேசத்தை உருவாக்கி ஒரு மிகச்சிறந்த மனித வளக் கட்டமைப்பைக் கொண்ட நாடாக இந்திய தேசத்தை உயர்த்திட முடியும்
   
        புதிய வெளிநாட்டு நிறுவனங்கள் நமது நாட்டில் தொழில்தொடங்க வரும்பொழுது அவர்களை தொழில்செய்ய அனுமதிக்கும்பொருட்டு கட்டணங்களை பெறுவதற்கு பதிலாக நாட்டின் அல்லது மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளான சாலை வசதிகள் சுகாதார வசதிகள் போன்றவற்றை செய்துகொடுக்கும்படி ஒப்பந்தம் மேற்கொண்டால் சிறந்தமுறையிலான கட்டமைப்பு கிடைப்பதுடன் நமது தேசத்தின் பெரும்பகுதி செலவீனங்கள் வெகுவாக குறையும். 

       இந்திய அரசியல் சட்டத்தின்படி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்றவர்கள் எவரும் அரசுப்பணியிலோ அல்லது அரசியல்பதவிகளிலோ பொறுப்பு வகிக்க முடியாது என்பதனை உறுதியாக பின்பற்ற வேண்டும் ஒருவேளை தவறான தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பின் தீர்ப்பு வழங்கிய நீதிபதி தண்டிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவந்தால் மட்டுமே நீதித்துறையானது உண்மையானதாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் திகழும் ஆனால் தற்பொழுது குயவன் கையில்கிடைத்த களிமண்ணைப்போல ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்களின் விரலசைவுக்கு தக்கபடி வளைந்துகொடுக்கும் வலுவற்ற நிலையிலேயே  காணப்படுகின்றது, இதுமாறவில்லை என்றால் மானுடம்போற்றும் மக்களாட்சி தத்துவம் மண்ணோடு மண்ணாகி போய்விடுமென்று நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை, இதை படித்துக்கொண்டிருக்கின்ற என் மதிப்பிற்குரியவர்களுக்கு
    
       இன்றைய தினத்தில் அரசியல் கட்சிகளெல்லாம் தனக்கு தக்கபடி தாளம்போடும் நபரைத்தான் ஜனாதிபதி ஆக்கவேண்டும் என  விழைகின்றன உலகின்மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் குடியரசுத் தலைவர் என்னும் பதவியில் அமரக்கூடியவர் வாழும் குடிமக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் நிலை விரைவில் மலரவேண்டும் ஏன் எனில் சாதாரண கவுன்சிலர் பதவிகளையே இன்றைய சூழலில் கரன்சிகள்தான் தீர்மானிக்கின்றன ஆனால் இந்த பதவி அவ்வாறு இருக்கக்கூடாது மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் ஒருவரை மக்கள் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொள்ளட்டும் முந்தைய ஜனாதிபதி தேர்வின்பொழுது எடுக்கப்பட்ட பொதுவான மக்கள் கருத்துக்கணிப்பில் 82% பேர் மீண்டும் குடியரசு தலைவராக டாக்டர் அப்துல்கலாம் அவர்களே வரவேண்டும் என்ற மக்களின் விருப்பம் என்னவாயிற்று ?
   
        மதவாத கட்சி என சொல்லப்படும் பாரதியஜனதா கட்சியே அப்துல்கலாம் அவர்களை ஆதரிக்க தயாராகத் இருந்தும் தன்னுடைய இழுப்புக்கெல்லாம் வளைந்துகொடுக்கவில்லை என்ற ஒரே காரணத்தினால் காங்கிரசும் தமிழ் தமிழ் என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தமிழினத் தலைவர் என தன்னைச் சொல்லிக்கொள்ளும் தலைவர் தனக்கு நடத்திக்கொண்ட பாராட்டுவிழாவில் பங்கேற்கவில்லை  என்ற காரணத்தினாலும் தங்கத்தமிழரான அப்துல்கலாமை ஏற்கவில்லை எனவே மக்களின் விருப்பம் வழக்கம்போல குப்பையிலே போடப்பட்டது. அரசியல்வாதிகளின் சுயநலம் ஆட்சிப்பொறுப்பைப் பெற்றது. விளைவு,,,,
     
    அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தது ஊழல்,,, விதையாய் தொடங்கிய ஊழல் இன்று விருட்சமாகிவிட்டது இனி கிளைகளை அறுக்க நேரமில்லை  ஆணிவேரை அறுத்துப்போட்டால் மட்டுமே வாழும் தலைமுறைக்கும்! வருங்கால தலைமுறைக்கும் மாட்டப்பட்டிருக்கும் தூக்குக்கயிறு அறுபடும்! இல்லையேல் இந்தியா வழக்கம்போல் ஒளிரும் ஜனநாயகத்தின் கல்லறையில்,,,
   
      நீங்களெல்லாம் என்னை அணைத்துக்கொள்ளும்வரை கதவின் வாசலில் அணையாமல் எரியும் இந்த ஒற்றைத்தீக்குச்சி